கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கியது: கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கியது - மத்திய குழு விரைந்தது


கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கியது: கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கியது - மத்திய குழு விரைந்தது
x
தினத்தந்தி 5 Jun 2019 12:00 AM GMT (Updated: 4 Jun 2019 10:10 PM GMT)

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு ‘நிபா’ வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொச்சி,

கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சல், கேரளாவில் மீண்டும் தாக்கி உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது.

கேரளாவில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கியது. கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேரும், அதன் அருகில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் 3 பேரும் என மொத்தம் 17 பேர், இந்த நோய் தாக்கியதால் பலியானார்கள்.

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வவ்வால்கள், அணில்கள் ஆகியவை கடித்துப் போடும் பழங்களை எடுத்துச் சாப்பிடும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இந்நோய் பரவுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தசை வலி, தலைவலி, வாந்தி, தொண்டை வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் மூளை வீக்கம் போன்ற நரம்பியல் பிரச்சினைகளும் ஏற்படும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்கள், கோமா நிலையை அடைவார்கள். இறுதியில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் தாக்கி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான ஒரு வாலிபர், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

தனது படிப்பு தொடர்பான பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் 2 வாரங்களுக்கு முன்பு கொச்சிக்கு வந்தார். அதே நேரத்தில் அவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளும் தென்படத் தொடங்கின. கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடுமையான காய்ச்சலுடன் 10 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கி இருப்பது, கேரளாவில் உள்ள 2 ஆய்வுக்கூடங்கள் மூலம் கண்டறியப்பட்டது. இருப்பினும், மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் தடுப்பு ஆய்வுக்கூடத்துக்கு அவரது ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பரிசோதனை முடிவு நேற்று காலை வந்தது. அதிலும் அவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கேரள மாநில சுகாதார அமைச்சகம் உஷார் அடைந்துள்ளது. அந்த கல்லூரி மாணவருடன் நெருங்கி பழகிய 86 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், கொச்சியில் உள்ள கலம்சேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட தனி வார்டில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவருக்கு தொடக்கத்தில் சிகிச்சை அளித்த 2 நர்சுகளுக்கு காய்ச்சலும், தொண்டை வலியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த கல்லூரி மாணவர் நடமாடிய எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எர்ணாகுளம் மாவட்ட தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கிய கல்லூரி மாணவரின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. செயற்கை சுவாசம் எதுவுமின்றி, அவர் இயல்பாகவே சுவாசிக்கிறார். காய்ச்சல் காரணமாக சில நேரங்களில் அவதிப்படுகிறார். அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, இந்த நோயை கட்டுப்படுத்தி பழக்கப்பட்டுள்ளோம். எனவே, இந்த முறையும் அதை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். சமூக வலைத்தளங்களில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அப்படி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கே.கே.சைலஜா கூறினார்.

இதற்கிடையே, டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன், இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவுடன் தொலைபேசியில் பேசினார்.

தற்போதைய நிலவரத்தை கேட்டறிந்தார். நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்துவித உதவிகளும் அளிக்கும் என்று அவர் உறுதி அளித்தார். ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட விசேஷ மருந்துகளை அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் 6 பேர் அடங்கிய மத்திய குழு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் கொச்சி போய்ச் சேர்ந்தனர்.

அவர்கள் நோய் பரவுவதை தடுக்கவும், நோய் பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தவும் மாநில அரசுக்கு உதவியாக இருப்பார்கள் என்று தெரிகிறது. டெல்லியிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


Next Story