நாடு முழுவதும் 123 அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள்: அனுமதிக்காக லஞ்ச ஒழிப்பு ஆணையம் காத்திருக்கிறது


நாடு முழுவதும் 123 அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள்: அனுமதிக்காக லஞ்ச ஒழிப்பு ஆணையம் காத்திருக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 9:05 PM GMT)

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்த அனுமதிக்காக 4 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கிறது.

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஊழியர்கள் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அவர்கள் மீது இறுதி விசாரணை நடத்தும். இதற்கான அனுமதி விதிகளின்படி 4 மாதங்களுக்குள் அந்தந்த துறைகளால் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி அரசு மற்றும் துறை அலுவலகங்களால் இன்னும் அனுமதி வழங்கப்படாமல் 57 வழக்குகள் உள்ளதாக மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்த 57 வழக்குகளில் 8 வழக்குகள் மத்திய பணியாளர் துறை அமைச்சகத்திலும், தலா 5 வழக்குகள் ரெயில்வே அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசிலும் நிலுவையில் உள்ளன.

சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு, அமலாக்கத்துறை இயக்குனரக உதவி இயக்குனர், ஒரு வருமான வரித்துறை அதிகாரி ஆகியோர் மீதும் விசாரணை நடத்த அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

இதில் 45 வங்கி ஊழியர்கள் மீதான வழக்குகளும் அடங்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, கார்பரேஷன் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை முன்பு இந்த வழக்குகள் உள்ளன.

யூனியன் பிரதேசங்கள், வருவாய்த்துறை, ராணுவ அமைச்சகம், உணவு வினியோக அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு தலா 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாடு, மராட்டியம், இமாசலபிரதேசம், ஆந்திரா, காஷ்மீர், சத்தீஷ்கார் ஆகிய மாநில அரசுகள் முன்பு தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story