ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு


ஆந்திர மாநில ஆளுநராக நியமனம் : சுஷ்மா சுவராஜ் மறுப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:25 AM IST (Updated: 11 Jun 2019 11:25 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநில ஆளுநராக முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக நேற்று வெளியான தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த பாஜக ஆட்சியின் போது  மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ். உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில்  நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்ததாக, நேற்று இரவு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆளுநராக நரசிம்மன் பதவி வகித்து வருகிறார். எனவே, நரசிம்மனை தெலுங்கானாவுக்கு மட்டும் ஆளுநராக தொடரச் செய்துவிட்டு, ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன. அதேநேரம், குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அதை ஹர்ஷர்வர்தன் நீக்கினார்.

இந்நிலையில்,  ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதவில்,

வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்ததாகவும், அதற்குள் டுவிட்டரில் தன்னை ஆந்திரா கவர்னராக நியமித்து விட்டனர் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா ஆளுநராக தன்னை நியமித்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், சுஷ்மா தனது மற்றொரு டுவிட்டில் தெரிவித்துள்ளார். 

Next Story