வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது
வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி,
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத சம்பவங்களை விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கும், இந்தியர்களின் நலனுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்காக என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியது. இந்த மசோதாவை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி ஏற்கனவே தாக்கல் செய்தார்.
நேற்று இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
தவறாக பயன்படுத்த மாட்டோம்
பின்னர், விவாதத்துக்கு அமித் ஷாவும், கிஷன் ரெட்டியும் பதில் அளித்து பேசினர். அமித் ஷா பேசியதாவது:-
என்.ஐ.ஏ. எவ்வகையிலும் தவறாக பயன்படுத்தப்படாது. என்.ஐ.ஏ. இதுவரை 272 வழக்குகளை கையில் எடுத்துள்ளது. இவற்றில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபணம் 90 சதவீதம் ஆகும்.
ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுத தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும்.
இந்த மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவோம். ‘பொடா’ சட்டம், பயனுடையது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்துவிட்டது.
ஆனால் நாங்கள் பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் யார்? எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
நிறைவேறியது
பின்னர், என்.ஐ.ஏ. மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அதன் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்தார்.
278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். 6 பேர் மட்டும் எதிர்த்து ஓட்டளித்தனர். எனவே, மசோதா நிறைவேறியது.
Related Tags :
Next Story