இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகிறார், டி.ராஜா


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகிறார், டி.ராஜா
x
தினத்தந்தி 20 July 2019 10:00 PM GMT (Updated: 20 July 2019 9:39 PM GMT)

மாநிலங்களவை எம்.பி. டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி, உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் தேசிய கவுன்சில் நேற்று முன்தினம் கூடியது.

இதில் மாநிலங்களவை எம்.பி.யான டி.ராஜாவை (வயது 70) புதிய பொதுச்செயலாளராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக அவரது பெயரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழுவும் ஒருமனதாக பரிந்துரை செய்திருந்தது.

இதன் மூலம் பிரதான கம்யூனிஸ்டு கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்டின் பொதுச்செயலாளர் பதவியை டி.ராஜா ஏற்க உள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த டி.ராஜா தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை தழுவியதன் மூலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மோசமான நிலையில் இருக்கும் இந்த வேளையில் அதன் பொதுச்செயலாளராக பதவியேற்க இருக்கும் டி.ராஜாவுக்கு மிகப்பெரும் சவால் காத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story