நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசுக்கு வெற்றி... இளைஞர் வீடு திரும்பினார்


நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசுக்கு வெற்றி... இளைஞர் வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 22 July 2019 10:27 AM GMT (Updated: 22 July 2019 11:12 AM GMT)

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநில அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கடந்த மாதம் தொடக்கத்தில் பதிவானது.  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர் எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனையடுத்து இளைஞருடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்கள் என 316 பேர் தொடர் கண்காணிப்பில்  இருந்தனர். ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லையென தெரியவந்தது.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கேரள அரசின் தொடர் சிகிச்சை முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இளைஞர் உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

“இளைஞர் இப்போது இயல்பாகவும், நலமாகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரை நேரில் பார்த்தேன்,” என மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் என்.கே. குட்டப்பன் கூறியுள்ளார். 

2018-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தெரியவந்தது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். கேரள அரசு அதிதீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் மூலம் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து பாராட்டு பெற்றது. மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Next Story