அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு உன்னாவ் பெண் ஜூலை 12ம் தேதியே கடிதம் எழுதி உள்ளார்


அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு உன்னாவ் பெண் ஜூலை 12ம் தேதியே கடிதம் எழுதி உள்ளார்
x
தினத்தந்தி 30 July 2019 8:02 AM GMT (Updated: 30 July 2019 8:02 AM GMT)

உத்தர பிரதேசம், உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 12ம் தேதியே கடிதம் எழுதியுள்ளார்.

உன்னாவ்,

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக  எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு  வருகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் நிகழ்ந்த இந்த கார் விபத்தில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்திற்கு காரணம் பாஜக  எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தான் என முக்கிய தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தர பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது என அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  ஜூலை 12ம் தேதியே கடிதம் எழுதியது தெரிய வந்துள்ளது . வழக்கை வாபஸ் பெறுமாறு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட பெண் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜூலை 12ம் தேதி கடிதம் எழுதியுள்ள நிலையில் ஜூலை 28ல் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story