பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் - பா.ஜனதா


பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் - பா.ஜனதா
x
தினத்தந்தி 30 July 2019 10:28 AM GMT (Updated: 30 July 2019 10:28 AM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் என பா.ஜனதா கட்சி கூறியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சென்ற கார் மீது சரக்கு லாரி மோதியது. இதில், அந்த பெண் படுகாயம் அடைந்தார். அவருடைய 2 உறவினர்கள் பலியானார்கள். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இவ்வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் ஜெயிலில் இருக்கிறார். இப்போது நடந்த விபத்து சம்பவத்தில் இவருடைய சதி திட்டம் உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  விபத்து சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் மாமா மகேஷ் சிங் அளித்த புகாரின் பேரில், குல்தீப்சிங் செங்கார் எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது ரேபரேலி போலீசார், கொலை, கொலை முயற்சி மற்றும் குற்றச்சதி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பெயர் குறிப்பிடப்படாத 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் எழுப்பப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட விபத்து, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் முன்னேற்றம் ஏதும் உள்ளதா? குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வை, ஏன் இன்னும் பா.ஜனதாவில் நீடிக்க விட்டுள்ளனர்? அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மெத்தனம் காட்டப்பட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்வரை, பா.ஜனதா அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?” என்று  கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் என பா.ஜனதா கட்சி கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் பேசுகையில், நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே செங்கார் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார். அதில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என கூறியுள்ளார். 

Next Story