ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமா? மத்திய அரசு விளக்கம்


ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 30 July 2019 12:55 PM GMT (Updated: 30 July 2019 12:55 PM GMT)

ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


மத்திய அரசு மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் திறமையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதே நடைமுறையை ரெயில்வே துறையும் பின்பற்ற தொடங்கி உள்ளது என தகவல் வெளியாகியது.

‘கட்டாய ஓய்வு’ என்ற பெயரில் ரெயில்வே ஊழியர்களில் கணிசமானோரை ஆள்குறைப்பு செய்ய ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அடுத்த ஆண்டு ரெயில்வேயில் 3 லட்சம் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியானது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கடந்த 2014 முதல் 2019–ம் ஆண்டுவரை, ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 262 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 637 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 60 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுதொடர்பான இதர பணிகள் 2 மாதங்களில் முடிவடையும்.

மேலும், ரெயில்வே ஊழியர்களில் 55 வயதை கடந்தவர்களையும், 30 வருடம் பணி முடித்தவர்களையும் அடையாளம் காணுமாறு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும், ரெயில்வே உற்பத்தி கூடங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பணிநடத்தை விதிகளின்படி, ரெயில்வே ஊழியர்களின் பணித்திறனை வழக்கம்போல் ஆய்வு செய்து வருமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் வழக்கமான நடவடிக்கைதான். இவை, ரெயில்வே ஸ்தாபன சட்டம் வகுத்த விதிமுறை ஆகும். பொதுநலன் கருதி, இந்த ஆய்வை ரெயில்வே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுகளிலும் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மற்றபடி, ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் ஏதும் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவல், அடிப்படை ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story