ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - உள்துறை அமைச்சர் அமித்ஷா


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
தினத்தந்தி 5 Aug 2019 11:34 AM IST (Updated: 5 Aug 2019 11:34 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவு ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த ஆலோசனையில், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு  ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட இதர அமைச்சர்களும் பங்கேற்றனர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் இன்று கூடியது. மாநிலங்களவை கூடியதும் உள்துறை அமைச்சர்  அமித் ஷா  அறிக்கை வாசிக்க தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது. காஷ்மீரில் போர் வரக்கூடிய சூழல் நிலவுவதால் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்தது ஏன்? எனவே இதற்கு  முன்னுரிமை அளித்து  விவாதிக்கப்பட வேண்டும் என கூறினார்.

எதிர்க்கட்சிகள் அமைதி காக்குமாறு வெங்கையா நாயுடு கோரிக்கை வைத்தார். விவாதத்தின் போது அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச அனுமதிக்கப்படும் என கூறினார்.

மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த  மசோதாவுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அமித்ஷா  பேசும் போது கூறியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவரின் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக  எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களின்  எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து. சிறப்பு பிரிவுகளை  ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

Next Story