கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2019 2:12 PM GMT (Updated: 8 Aug 2019 2:12 PM GMT)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பெய்துவரும் பருவமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மிக அதிகன மழைக்கும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Next Story