தேசிய செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்துதமிழகத்துக்கு காவிரியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு + "||" + For Tamil Nadu On the Cauvery 1 lakh cubic feet of water opening

கர்நாடக அணைகளில் இருந்துதமிழகத்துக்கு காவிரியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்துதமிழகத்துக்கு காவிரியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 2,421 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
மைசூரு,

கேரளா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தின் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கர்நாடகத்தில் நேற்று மழைக்கு 4 பேர் பலி ஆனார்கள். இதுவரை அந்த மாநிலத்தில் மழைக்கு மொத்தம் 10 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்) அணை உள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபினி அணை உள்ளது.

கே.ஆர்.எஸ் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு, கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கபினி அணை நிரம்பியது

நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 22,719 கனஅடி வீதமும், கபினிக்கு 18,417 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 91 அடி நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கபினி அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

1 லட்சம் கன அடி நீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீரும், அதன் அருகே உள்ள தாரகா அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடியும் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த வகையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் மொத்தம் 1 லட்சத்து 2,421 கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இந்த தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 5,097 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 53.98 அடியாக இருந்தது.

கர்நாடகம் காவிரியில் அதிக அளவில் உபரி நீரை திறந்துவிட்டு இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.