முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கினார், பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பும் வாரணாசி பெண்கள்


முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கினார், பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பும் வாரணாசி பெண்கள்
x
தினத்தந்தி 11 Aug 2019 9:33 AM GMT (Updated: 11 Aug 2019 9:33 AM GMT)

முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக்கிய பிரதமர் மோடி தங்களுடைய சகோதரர்கள் என பாராட்டும் வாரணாசி பெண்கள் அவருக்கு ராக்கியை அனுப்பி வருகின்றனர்.

‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்து ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மத்திய அரசு மசோதா இயற்றியது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கியது. இந்த மசோதாவில், தடையை மீறி ‘முத்தலாக்’ நடைமுறையை பின்பற்றும் ஆணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்திருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன, இருப்பினும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ‘முத்தலாக்’ தடை மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.  மசோதா சட்டமாகியது. தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால், அவர் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்நகர்வை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பலர் பாராட்டினர். இந்நிலையில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பெண்கள், பிரதமர் மோடியை எங்களுடைய மூத்த சகோதரர் என அழைத்துள்ளனர். அதுமட்டமல்லாது அவருக்கு ராக்கியை அனுப்பி வருகின்றனர்.

ராக்கியை தயார் செய்யும் ஹுமா பானோ பேசுகையில், “பிரதமர் மோடி முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கியுள்ளார். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி மூத்த சகோதரர் போன்றவர். அவருக்காக நாங்கள் ராக்கியை தயாரித்து வருகிறோம்,” என கூறியுள்ளார். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இது ஒரு பிரசாரம் என விமர்சனம் செய்துள்ளது. ஆட்சியில் உள்ளவர்களால் வலுக்கட்டாயமாக இதுபோன்று செய்ய வைக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

Next Story