தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கு நன்றி - பினராயி விஜயன் தமிழில் டுவீட்


தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கு நன்றி - பினராயி விஜயன் தமிழில் டுவீட்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:53 AM GMT (Updated: 16 Aug 2019 12:38 PM GMT)

தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  கேரளாவின், 14 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கண்ணுார், காசர்கோடு, இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கேரளாவில் மழை நின்றது.  மழை பெய்யாததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாம்களில் தங்கியிருந்த ஏராளமானோர் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.  அடுத்த ஒருவாரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே மழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவுக்கு பல தரப்பினரும் பொருளாகவும், பணமாகவும் தந்து உதவி வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் டுவிட் செய்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., ‘தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். 

சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Next Story