ஏகே 47 பறிமுதல்: நான் தலைமறைவாக இல்லை, நானே சரணடைவேன்: பீகார் எம்.எல்.ஏ.


ஏகே 47 பறிமுதல்: நான் தலைமறைவாக இல்லை, நானே சரணடைவேன்:  பீகார் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 19 Aug 2019 5:27 AM GMT (Updated: 19 Aug 2019 8:49 AM GMT)

மூன்று, நான்கு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என அனந்த்சிங் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் மோகாமா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அனந்த்சிங். பாட்னா மாவட்டம் லாட்மா கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான மூதாதையர் வீட்டில் இருந்து போலீசார் ஏ.கே.47 எந்திர துப்பாக்கி மற்றும் 2 வெடிகுண்டுகள் உள்பட சில ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.

இதுதொடர்பாக பார் போலீஸ் நிலையத்தில் அனந்த்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 அதிநவீன துப்பாக்கி இருந்தது குறித்து சர்ச்சையான தகவல்களும் வெளியாகி உள்ளன. அவர் அந்த துப்பாக்கியை ஆயுத வினியோகஸ்தர்களிடம் இருந்து வாங்கினாரா? அல்லது ஜபல்பூரில் உள்ள போர்த்தளவாட தொழிற்சாலையில் இருந்து திருடப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. அனந்த்சிங்  தலைமறைவானதாக கூறப்பட்டது. ஆனால் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பீகார் எம்.எல்.ஏ. அனந்த் சிங், ''தான்  தலைமறைவாக இல்லை என்றும் ,   நோய்வாய்ப்பட்ட தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக சென்றதாகவும்'' கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் ''தான் மூன்று, நான்கு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைவேன்'' என்று சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ உறுதியளித்துள்ளார்.

அவரது கூட்டாளியான சோட்டன் சிங் கைது செய்யப்பட்டது குறித்து  அனந்த் சிங்,  ''அவர் எனது  உறவினர் என்றும், எனவே பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில்  தான் தங்கியிருப்பதாகவும்'' கூறினார். அவர் கைது செய்யப்பட்ட வழக்கில்,  சோட்டனும் அவரும் குற்றம் சாட்டப்பட்டதாக சிங் மேலும் கூறினார். "இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை விடுவித்து அவரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக வைத்திருப்பது எப்படி சாத்தியம்?" என்று அனந்த் சிங் வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். 

எம்.எல்.ஏ.வின் வீட்டில்  நடத்தப்பட்ட சோதனையின் போது, அனந்த் சிங்கின் பல கூட்டாளிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு  குறிப்பை போலீசார் கண்டுபிடித்தனர். அனந்த் சிங்குக்கு சொந்தமான 15 ஆயுதங்களின் குறியீட்டு பெயர்களும் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த குறிப்பை அனந்த் சிங்கின் படுக்கையின் கீழ் இருந்து போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story