சிட்னியில் மணிபர்ஸ் திருடிய புகாரில் சிக்கிய ஏர்இந்தியா மண்டல இயக்குநருக்கு கட்டாய பணி ஓய்வு


சிட்னியில் மணிபர்ஸ் திருடிய புகாரில் சிக்கிய ஏர்இந்தியா மண்டல இயக்குநருக்கு கட்டாய பணி ஓய்வு
x

சிட்னியில் மணிபர்ஸ் திருடிய புகாரில் சிக்கிய ஏர்இந்தியா மண்டல இயக்குநருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் கிழக்கு மண்டல இயக்குநர் ரோஹித் பாஷின் ஜூன் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி  விமான நிலையத்தில் உள்ளூர் வரிகள் விதிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்யும் டூட்டி பிரீ கடைக்கு சென்று பொருட்களை வாங்கியுள்ளார். அங்கு  கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மணிபர்ஸ் ஒன்றை திருடியுள்ளார். அவர் திருடிய காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட அந்நாட்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இச்சம்பவத்தால் சிட்னி விமான நிலையத்தில் ஏர்இந்தியா நிறுவனத்துக்கு பெரும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து ரோஹித் பாஷின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா விசாரணையில் அவர் திருடியது உறுதியானது. இதனையடுத்து அவரை பணியிடை நீக்க செய்ய மேற்கொள்ளப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தண்டனையாக கட்டாய ஓய்வில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக ஏர் இந்தியாவின் தலைவர் அஸ்வினி லோஹனியை சந்தித்த ரோஹித் பாஷின் தன்னை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்படி சென்றால் அவருக்கு வழக்கமான பண பயன்கள் கிடைக்கும். இதனை ஏற்க முடியாது என அஸ்வினி லோஹனி தெரிவித்துவிட்டார். இப்போது ரோஹித் பாஷின் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். 

Next Story