நீர் வீழ்ச்சி போல மாறிய மும்பை அடுக்குமாடி கட்டிடம்!


நீர் வீழ்ச்சி போல மாறிய மும்பை அடுக்குமாடி கட்டிடம்!
x
தினத்தந்தி 5 Sep 2019 7:45 AM GMT (Updated: 5 Sep 2019 7:45 AM GMT)

மும்பையில் நேற்று கனமழை பெய்த நிலையில், அங்குள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் இருந்து அருவி போல நீர் கொட்டியது.

மும்பை,

மும்பையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை வெளுத்து  வாங்கியதால் நகருக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் நிரம்பின. கடந்த மாத தொடக்கத்தில் பெய்த பலத்த மழையால் மக்கள் பரிதவித்தனர்.

இந்தநிலையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக மும்பையில் மழை இல்லாமல் இருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை தலைகாட்ட தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டி தீர்த்தது. நேற்று காலையிலும் தொடர்ந்த பேய் மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்தது. அதன்பிறகும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது.

இடைவிடாது பெய்த மழையால் மும்பை மாநரகம் வெள்ளத்தில் மிதந்தது.  ரயில், சாலை போக்குவரத்து முடங்கியது.  மும்பையில், இன்று மழை பெய்யாததால், வெள்ள நீர் வடியத்தொடங்கியது. இதனால், இன்று இயல்பு வாழ்க்கையை நோக்கி மும்பை வாசிகள் திரும்பி வருகின்றனர். 

தெற்கு மும்பையில் உள்ள  40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழும் தண்ணீர் பிரம்மாண்ட செயற்கை நீர் வீழ்ச்சி போல காணப்பட்டது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாகிறது. மழை நீரால் தண்ணீர் இவ்வாறு கொட்டவில்லை எனவும், அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்து இருந்த தண்ணீர் டேங்க் உடைந்து, நீர் கொட்டியதாலேயே  அருவி போல நீர் கொட்டியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

Next Story