பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகள் -அஜித் தோவல்


பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகள் -அஜித் தோவல்
x
தினத்தந்தி 7 Sep 2019 8:10 AM GMT (Updated: 7 Sep 2019 8:12 AM GMT)

பாகிஸ்தான் எல்லையில் உள்ள தொலைதொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறி உள்ளார்.

ஜம்மு,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370 நீக்கத்திற்கு பெருமளவிலான காஷ்மீரிகள் ஆதரவு வழங்கியுள்ளனர் என அறிந்து திருப்தியடைந்து உள்ளேன்.

சிறந்த வாய்ப்புகள், வருங்காலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.  ஒரு சிலரே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொது ஒழுங்கை மாநில போலீசார் மற்றும் சில மத்திய படைகளே கையாளுகின்றன.  ராணுவத்தின் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை.  அவர்கள் பயங்கரவாதிகளுடன் போர் செய்வதற்காக உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 199 காவல் நிலையங்களில் 10க்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.  மற்றவைகளுக்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை.  காஷ்மீரில் லேண்ட்லைன் வழியான தொலைபேசி தொடர்பு வசதி 100 சதவீதம் அளவிற்கு செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

பாகிஸ்தான் விவகாரங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது.  இதுவரை 230 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு உள்ளனர்.  சிலர் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர்.  சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து காஷ்மீரிகளின் வாழ்வை பாதுகாக்க தீர்மானித்து உள்ளோம்.  எல்லையில் உள்ள பாகிஸ்தானிய தொலைதொடர்பு டவர்களில் இருந்து, எப்படி அதிகளவில் ஆப்பிள் ஏற்றி கொண்டு லாரிகள் செல்கின்றன.  அதனை தடுக்க முடியவில்லையா? உங்களுக்கு வளையல்களை அனுப்பி வைக்கவா? என்று இங்குள்ள அவர்களது ஆட்களுக்கு, பாகிஸ்தான் தகவல்களை அனுப்ப முயற்சிப்பது இடைமறித்து கேட்கப்பட்டு உள்ளது.  அமைதியை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் என்றும் தோவல் கூறியுள்ளார்.

இங்கு அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் உள்ளனர்.  அவர்கள் ஒன்று கூடினால், அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.  அவர்கள் மீது குற்ற வழக்கோ அல்லது தேசத்துரோக வழக்கோ இல்லை.  ஜனநாயகம் செயல்படும் சூழ்நிலை வரும்வரை அவர்கள் காவலில் இருந்திடுவர்.  மிகவிரைவில் ஜனநாயகம் வரும் என நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story