தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்


தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 8:17 PM GMT)

தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ளன. அவற்றில் திரும்ப செலுத்தப்படாமல் இழுபறியில் உள்ள கடன்களை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று வங்கிகளை கேட்டுக்கொள்கிறேன்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதை வங்கிகள் பின்பற்ற வேண்டும். மேலும், அந்த கடன்களை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும். இது, சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு உதவும்.

அத்துடன், பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் தேவைப்படும் பொதுமக்களுடன் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடன் முகாம்கள் 2 தவணையாக நடத்தப்படும். முதலாவது முகாம், இம்மாதம் 24-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை 200 மாவட்டங்களில் நடைபெறும். 2-வது முகாம், அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிவரை 200 மாவட்டங்களில் நடத்தப்படும்.

தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story