மாணவர்கள் மத்தியில் கோழிக்கறி சாப்பிட்ட கல்வி அதிகாரி இடைநீக்கம்


மாணவர்கள் மத்தியில் கோழிக்கறி சாப்பிட்ட கல்வி அதிகாரி இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:00 PM GMT (Updated: 12 Oct 2019 9:11 PM GMT)

மாணவர்கள் மத்தியில் கோழிக்கறி சாப்பிட்ட கல்வி அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் சுந்தர்கட் மாவட்டத்தின் பணாய் என்ற இடத்தில் தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு வட்டார கல்வி அதிகாரி வினய் பிரகாஷ் சாய் மாணவர்களின் மதிய உணவை ஆய்வு செய்ய சென்றார். முதலில் சமையல் அறையை ஆய்வு செய்த அவர் பின்பு மதிய உணவு சாப்பிட மாணவர்களுடன் அமர்ந்தார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது மாணவர்களுக்கு சாதமும், பருப்பும் பரிமாறப்பட்டது. ஆனால் வினய் பிரகாஷ் சாய் கோழிக்கறியையும், சாலட்டையும் சாப்பிட்டு இருக்கிறார். அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிகாரியின் இந்த செயலால் கடும் கோபம் கொண்ட அப்பகுதி மக்கள் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் நிகில் பவான் கல்யாணிடம் முறையிட்டனர்.

பொதுசேவையின் போது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வட்டார கல்வி அதிகாரியை அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்தார்.


Next Story