உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் சாவு


உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2019 8:30 PM GMT (Updated: 20 Oct 2019 8:30 PM GMT)

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம், மலைப்பாதை நிறைந்தது. அங்கு மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது, அங்கு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சோன்பிரயாக்கில் இருந்து ருத்ரபிரயாக் நோக்கி ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களில் 8 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ருத்ரபிரயாக் மாவட்டம் சாந்திகாதர் என்ற இடத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

மண் உள்ளிட்ட இடிபாடுகளுடன் பெரிய பாறை ஒன்றும் உருண்டு வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், அவர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது பாறையும், இடிபாடுகளும் உருண்டு விழுந்தன.

அந்த வேகத்தில், வாகனங்கள் தள்ளப்பட்டு 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்தன.

இந்த கோர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மீதி 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

சம்பவ இடத்தில் பலியான 5 பேரில் 4 பேரின் உடல்கள் எளிதாக மீட்கப்பட்டன. ஒருவரின் உடல், பாறை அடியில் சிக்கி இருந்ததால், பாறையை உடைக்கும் எந்திரத்தின் உதவியால் பாறை உடைக்கப்பட்ட பிறகு உடல் மீட்கப்பட்டது.

பலியானவர்களில் 3 பேரை பற்றிய அடையாளங்கள் தெரியவந்துள்ளன. ஒருவர் ருத்ரபிரயாக்கையும், 2 பேர் ரிஷிகேஷையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

பலியானோர் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச மாநில கவர்னர் பேபி ராணி மவுரியாவும், பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ரவத்தும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story