மராட்டியம், அரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி -பிரதமர் மோடி


மராட்டியம், அரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Oct 2019 2:01 PM GMT (Updated: 24 Oct 2019 2:01 PM GMT)

இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மற்றும் அரியானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 

மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மராட்டிய மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி 158 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, இதில் பாஜக 100 இடங்களிலும் சிவசேனா 58 இடங்களிலும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக, 40 இடங்களிலும், காங்., 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமையும் நிலை உருவாகியுள்ளது.

இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- மகாராஷ்டிரா, அரியானாவில் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றதில் மகிழ்ச்சி. மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களின் வளர்ச்சிக்காக எங்களின் பணி தொடரும்.  பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Next Story