சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் பா.ஜனதா உறுதி


சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் பா.ஜனதா உறுதி
x
தினத்தந்தி 26 Oct 2019 2:13 PM GMT (Updated: 26 Oct 2019 2:13 PM GMT)

சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கமாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சண்டிகார், 

அரியானாவில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அரியானா லோகித் கட்சி சார்பில் சிர்சா தொகுதியில் வெற்றி பெற்றவர் கோபால் கண்டா. இவர் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் மாநில மந்திரியாகவும் பதவி வகித்தார். அப்போது ஒரு விமான பணிப்பெண் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் பதவி விலகி இருந்தார்.

இந்த தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பா.ஜனதா பெறாததால், அதற்கு ஆதரவு அளிக்க கோபால் கண்டா முன்வந்தார். ஆனால் அவரது ஆதரவை பெறக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 2 பெண்களின் சாவின் பின்னணியில் இருக்கும் சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவை பெறக்கூடாது என உமாபாரதி போன்ற பா.ஜனதா தலைவர்களும் கட்சி தலைமைக்கு வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கோபால் கண்டாவின் ஆதரவை பா.ஜனதா ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கோபால் கண்டாவின் ஆதரவை பா.ஜனதா ஏற்கப்போவதில்லை’ என்று தெரிவித்தார்.

Next Story