பன்முகத்தன்மை பலவீனம் இல்லை, பலம்- பிரதமர் மோடி


பன்முகத்தன்மை பலவீனம் இல்லை, பலம்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 31 Oct 2019 6:39 AM GMT (Updated: 31 Oct 2019 6:39 AM GMT)

பன்முகத்தன்மை நாட்டின் பலவீனம் இல்லை, பலமே என்று பிரதமர் மோடி பேசினார்.

அகமதாபாத், 

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த தினம் இன்று தேச ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி நர்மதா மாவட்டத்தில் கேவடியா பகுதியில் எழுப்பப்பட்டுள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காகப் பிரதமர் மோடி நேற்று குஜராத் சென்றார்.

இன்று காலை கேவடியா பகுதியில் அமைந்துள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு வந்து மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதன்பின் அங்கு  கூடியிருந்த  அதிகாரிகள், மாணவர்கள், மக்களிடம் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

மேலும், குஜராத் போலீஸார், ஜம்மு காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.  

இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- “ வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தனித்துவம் மற்றும் பெருமை ஆகும். பன்முகத்தன்மை நமது பலமே தவிர, பலவீனம் அல்ல. நம்முடன் போர் தொடுத்து வெல்ல முடியாதவர்கள், நமது ஒற்றுமையை சிதைக்க முயற்சிக்கின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-வது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கே வழிவகுத்தது. எனவே, அந்த சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்தது.   சர்தார் படேலால் ஈர்க்கப்பட்டு, பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம்” என்றார். 

Next Story