அடிக்கடி வெளிநாடு பயணம்: ராகுல்காந்தி ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? பாரதீய ஜனதா கேள்வி


அடிக்கடி வெளிநாடு பயணம்: ராகுல்காந்தி ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? பாரதீய ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 31 Oct 2019 12:25 PM GMT (Updated: 31 Oct 2019 12:25 PM GMT)

அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினருக்கும் தெரியாத அளவுக்கு ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? என பாரதீய ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி

பாரதீய ஜனதா  செய்தித் தொடர்பாளர்  நரசிம்ம ராவ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2014-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ராகுல் காந்தி 16 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றில் 9 பயணங்களுக்கு காரணம் என்ன என்பது வெளியே சொல்லப்படவில்லை. தனது தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் ராகுல் காந்தி. அதன் காரணமாகவே அமேதி மக்கள் அவரைத் தோற்கடித்துள்ளனர்.

ராகுல் காந்தி, தியானம் செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. தியானம் செய்ய உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு வருகிறார்கள். இவர் வெளிநாட்டுக்கு செல்வது ஏன்?

அரசு விதிகளின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இவ்வருடம் ஜூலை மாதம் எல்லா எம்.பிக்களிடமும், தங்களது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவர் எதையும் மறைக்க கூடாது. 

நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தெரியாத அளவுக்கு அவர் ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா?  அந்த ரகசியம் என்ன இவ்வாறு அவர் கூறினார்.

Next Story