முதல்வர் பதவியில் உறுதியாக உள்ளோம் : சிவசேனா மீண்டும் திட்டவட்டம்


முதல்வர் பதவியில் உறுதியாக உள்ளோம் : சிவசேனா மீண்டும் திட்டவட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2019 8:20 AM GMT (Updated: 8 Nov 2019 10:28 AM GMT)

முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று சிவசேனா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. அதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 

சரத்பவாரின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த கட்சிகள் இடையே திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் உறுதிப்பட கூறினார். இதனால் இழுபறி நிலை முடிவுக்கு வராமல் உள்ளது.  மராட்டிய சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மராட்டிய அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. 

இந்த சூழலில், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத், முதல் மந்திரி பதவியை நாங்கள் பெறுவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.  மேலும், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பாஜக, உத்தவ் தாக்ரேவை ஆட்சி அமைப்பது தொடர்பாக அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ள சஞ்செய் ராவத், காபந்து அரசில் இருப்பதை முறைகேடாக பாஜக பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story