பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும் - சரத்பவார்


பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும் - சரத்பவார்
x
தினத்தந்தி 8 Nov 2019 12:57 PM GMT (Updated: 8 Nov 2019 12:57 PM GMT)

பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது.

இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டது.

இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.

இதனிடையே தேசியவாத காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் இருந்து வந்த நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று சரத்பவார் அறிவித்ததன் மூலம் மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சந்தித்துப் பேசினார். 

பின்னர் சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க பாஜக – சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஆட்சியமைக்க வேண்டும். மராட்டியத்தில் பொருளாதாரம் மற்றும் நலனுக்கு வலிமையான ஒரு அரசு அமைய வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு ஏற்படும்.

மராட்டியம் போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது. மராட்டிய சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி ஏன் அழைக்கவில்லை என்று சரத்பவார் கேள்வி எழுப்பினார்.

Next Story