புல்புல் புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு


புல்புல் புயலுக்கு 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 1:38 AM GMT (Updated: 10 Nov 2019 1:38 AM GMT)

புல்புல் புயலால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.

புவனேஸ்வர்,

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர், கடந்த 8ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.  இதனால்  தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.  இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீசியது.

இதனால் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும் என்றும் இதனை முன்னிட்டு வருகிற 11ந்தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளது.

இதனால் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 12 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்கும் அடுத்த 18 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதியில் நேற்று முழுவதும் மழை பெய்தது.  மரங்கள் வேருடன் சாய்ந்தன.  கொல்கத்தா நகரில் கிளப் ஒன்றில் இருந்த மரம் ஒன்று சாய்ந்ததில் நபரொருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று ஒடிசாவில், கேந்திரபாரா நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

அதிதீவிர புல்புல் புயலால் கொல்கத்தா விமான நிலையம் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் ராணுவம், விமான படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் குவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Next Story