அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது


அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2019 10:03 PM GMT (Updated: 11 Nov 2019 10:03 PM GMT)

உத்தரபிரதேசத்தில், அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

லக்னோ,

அயோத்தி வழக்கில் கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக, உத்தரபிரதேச போலீசார், சமூக வலைத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் சமூக வலைத்தளங்களில் 8 ஆயிரத்து 275 சர்ச்சை பதிவுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் ‘டுவிட்டர்’ தளத்தில் 2 ஆயிரத்து 869 பதிவுகளும், ‘பேஸ்புக்’ தளத்தில் 1,355 பதிவுகளும் அடங்கும். இதுதவிர, ‘யூடியூப்’ தளத்தில் 98 சர்ச்சை வீடியோக்களும் கண்டறியப்பட்டன. எல்லாவற்றையும் உடனே நீக்குமாறு சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். சிலரது கணக்குகளையே நீக்குமாறு வலியுறுத்தினர்.

அந்த உத்தரவை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 நாட்களில் 77 பேர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Next Story