ரபேல் வழக்கில் மோடி பற்றி தெரிவித்த கருத்து ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது


ரபேல் வழக்கில் மோடி பற்றி தெரிவித்த கருத்து ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 14 Nov 2019 11:45 PM GMT (Updated: 15 Nov 2019 4:44 AM GMT)

ரபேல் வழக்கில் பிரதமர் மோடி பற்றி தெரிவித்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், இனி கவனமாக இருக்குமாறு அவருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

புதுடெல்லி, 

ரபேல் வழக்கில் பிரதமர் மோடி பற்றி தெரிவித்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், இனி கவனமாக இருக்குமாறு அவருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

ராகுல் காந்தி கருத்து

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு கூறியது.

பின்னர் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போது, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “ரபேல் விவகாரத்தில் காவலாளியே (பிரதமர் மோடி) திருடன்” என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பதாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவதூறு வழக்கு

ராகுல்காந்தி மீது பாரதீய ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, ரபேல் தொடர்பான மறுஆய்வு மனுக்களுடன் இணைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ராகுல்காந்தி பேசியது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி ராகுல்காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது. தீவிர தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்ததாகவும், தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் வகையில் புதிய பிரமாண பத்திரத்தில் விளக்கம் தருமாறு ராகுல்காந்திக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தீர்ப்பு

இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பற்றி தான் கூறிய தவறான வார்த்தைகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், இந்த வார்த்தைகள் உள்நோக்கம் ஏதுமின்றி, வாய்தவறி கூறப்பட்டவை என்றும், எனவே இந்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு தன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைக்குமாறும் ராகுல் காந்தி கூறி இருந்தார்.

இந்தநிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு ரபேல் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கியதோடு, ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கிலும் தீர்ப்பு கூறியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சரியாக படிக்காமல்...

ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சரியாக படிக்காமலும், அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை தீர விசாரிக்காமலும் பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி கூறியது உண்மைக்கு புறம்பானது. இதை ஒருமுறை மட்டுமின்றி பலமுறை மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் ராகுல் காந்தி கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

அவர் தன்னுடைய தவறை எளிமையாக ஒப்புக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோராமல் 20 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும், ஆவணங்களையும் கோர்ட்டுக்கு தாக்கல் செய்தது, இந்த விஷயத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. கடந்த 8.5.2019-ந் தேதி அன்று நடைபெற்ற வாதத்தின் போது ராகுல் காந்தியின் வக்கீல் சமயோசிதமாக மற்றொரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

கவனம் தேவை

அரசியல் தளத்தில் முக்கியமான பதவியை வகிக்கும் ராகுல் காந்தி போன்றவர்கள் மேலும் கவனமாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அவருடைய பிரசாரத்தில் என்ன வரிகள் வரவேண்டும் என்பதை அரசியல் தொடர்புள்ள மனிதர்கள்தான் பரிசீலனை செய்ய வேண்டும். இந்த கோர்ட்டோ அல்லது வேறு கோர்ட்டோ அவருடைய அரசியல் உரையில் என்ன இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடியாது. கோர்ட்டு சொல்லாத ஒரு விஷயத்தை ஒருவரின் கருத்தாக கூறியது இதுவரை கோர்ட்டில் நடைபெற்றது இல்லை.

இருப்பினும் ராகுல் காந்தி தரப்பில் இறுதியாக தாக்கல் செய்த மன்னிப்பு கோரும் பிரமாண பத்திரத்தை ஏற்றுக் கொண்டு, வருங்காலத்தில் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தி இந்த அவதூறு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story