கர்நாடக இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’


கர்நாடக இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’
x
தினத்தந்தி 14 Nov 2019 9:30 PM GMT (Updated: 14 Nov 2019 8:15 PM GMT)

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா ‘சீட்’ வழங்கி உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா ‘சீட்’ வழங்கி உள்ளது.

போட்டியிட தடையில்லை

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான முந்தைய காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின்போது, இந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக அப்போதைய சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 17 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என அறிவித்தனர். ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

பா.ஜனதாவில் இணைந்தனர்

முன்னதாக, ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ரோஷன் பெய்க்கை தவிர மீதமுள்ள 16 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.

சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஷன் பெய்க் மீது தனியார் நகைக்கடை மோசடி புகார் எழுந்துள்ளதால், அவரை பா.ஜனதா கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.

தமிழருக்கு வாய்ப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் இணைந்த சில மணி நேரத்தில், அவர்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கி வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது.

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் 13 இடங்களுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிபென்னூர், சிவாஜிநகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்காமல் இருந்தது. இதில் சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான முன்னாள் கவுன்சிலர் எம்.சரவணா போட்டியிடுவார் என நேற்று மாலையில் பா.ஜனதா அறிவித்தது.

Next Story