தெலுங்கானா அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்; யூனியன் தலைவர் அறிவிப்பு


தெலுங்கானா அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்; யூனியன் தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2019 1:45 PM GMT (Updated: 25 Nov 2019 1:45 PM GMT)

தெலுங்கானா அரசு போக்குவரத்து ஊழியர்களின் 2 மாதகால போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 5ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றனர். தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினால் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்தார். தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வேண்டும் என்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்தார். அந்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்களை இயக்க சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.  பணி நீக்கம் செய்யப்பட்டதால் சில ஊழியர்கள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்தனர்.

அரசை கண்டித்து தினமும் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.  இதனால் போராட்டம் தீவிரமடைந்தது.  இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களின் 2 மாதகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.  போக்குவரத்து கழக நிர்வாகமோ அல்லது தெலுங்கானா அரசோ தொழிலாளர்களின் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்று கொள்ளவில்லை.

இந்த சூழலில், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான கூட்டு செயற்குழு தலைவர் அஸ்வதமன் ரெட்டி கூறும்பொழுது, போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினை முடித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

Next Story