சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் மீது மிளகாய் பொடி தாக்குதல்


சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் மீது மிளகாய் பொடி தாக்குதல்
x
தினத்தந்தி 26 Nov 2019 5:27 AM GMT (Updated: 26 Nov 2019 9:15 PM GMT)

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஆர்வலர் பிந்து மீது மிளகாய் பொடி தாக்குதல் நடத்தப்பட்டது.

கொச்சி,

சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை.

ஆனாலும், சபரிமலையில் அமைதியை குலைக்கும் வகையில் விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க போவதில்லை என்று கேரள அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற ஏராளமான பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் தனது ஆதரவாளர்களான 5 இளம்பெண்களுடன் நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தார். அவர்களை கடந்த ஆண்டு சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து அம்மினி உள்ளிட்ட சில பெண்கள் வரவேற்றனர். திருப்தி தேசாய் வந்திருப்பதை அறிந்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பினர் விமான நிலையத்திலேயே போராட்டம் நடத்தினர்.

திருப்தி தேசாய் உள்ளிட்டோரை போலீசார் பாதுகாப்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு காத்திருந்த கர்மசமிதி அமைப்பை சேர்ந்த தொண்டர் ஒருவர், திருப்தி தேசாயுடன் இருந்த பிந்து அம்மினி மீது மிளகாய் பொடி ‘ஸ்பிரே’ அடித்து தாக்குதல் நடத்தினார்.

அதன்பின் அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து திருப்தி தேசாய், பிந்து உள்ளிட்டோரை மீட்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். தாக்குதல் நடத்திய நபரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தாங்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்தி தேசாய் தரப்பினர் போலீசாரிடம் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து திருப்தி தேசாய் தனது குழுவினருடன் சபரிமலை புறப்பட தயாரானார்.

அதற்காக ஆன்லைன் மூலம் வாகனம் முன்பதிவு செய்தனர். அங்கு வந்த வாகனத்தில் பெண்கள் ஏறினர். அப்போது டிரைவரிடம் நிலக்கல்லுக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். ஆனால் டிரைவர் செல்ல மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய பெண்கள் மீண்டும் கொச்சி கமிஷனர் அலுவலகம் சென்றனர். சபரிமலையில் தரிசனம் செய்த பிறகே திரும்பி செல்வோம் என அவர்கள் பிடிவாதமாக உள்ளனர். திருப்தி தேசாய் மற்றும் குழுவினர் எப்போது வேண்டுமானாலும் நிலக்கல் வரலாம் என்ற நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story