தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா.
புதுடெல்லி,
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.
தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.
தனிநாடு இணைய தளத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.
கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.
கைலாசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது
கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐநாவை நாட உள்ளார்.
பாஸ்போர்ட் இரு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன..!!
Related Tags :
Next Story