பட்டாசுக்கு தடை கோரும் வழக்கு ‘தர நிர்ணய மையம் அமைக்க தயார்’ தொழிற்சாலைகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்


பட்டாசுக்கு தடை கோரும் வழக்கு   ‘தர நிர்ணய மையம் அமைக்க தயார்’   தொழிற்சாலைகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:45 PM GMT (Updated: 12 Dec 2019 11:59 PM GMT)

தர நிர்ணய மையம் அமைக்க தயார் என்று பட்டாசு தொழிற்சாலைகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைத்தது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது.

மேலும் பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டது.

திருத்தம் கோரி மனு

இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு கடந்த மாதம் 26-ந் தேதி தலைமை நீதிபதி எஸ்.போப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரியம் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர். மேலும் தரக்கட்டுப்பாடு அமைப்புகளை தொழிற்சாலைகள் எப்படி செயல்படுத்தப்போகின்றன என்பது குறித்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

விசாரணை

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் ராஜீவ் தத்தா, விகாஸ் சிங், வக்கீல் சாயி தீபக், மனுதாரர் அர்ஜூன் கோபால் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அறிக்கை தாக்கல்

விசாரணை தொடங்கியதும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தர நிர்ணய மையம் அமைக்க தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு ரூ.9 கோடி செலவிட முன்வந்துள்ளதாகவும் தொழிற்சாலைகள் தரப்பில் ரூ.6 கோடி வழங்க தயாராக இருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 19-ந் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story