பெங்களூரு முழுவதும் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


பெங்களூரு முழுவதும் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 4:16 PM GMT (Updated: 18 Dec 2019 4:16 PM GMT)

கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட பல இடங்களில் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 12–ந் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா, சட்டமாகி உள்ளது. 

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள், நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடது சாரி அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.  இதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் பல இடங்களிலும், மக்கள் திரளாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

Next Story