டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது


டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 20 Dec 2019 5:45 AM GMT (Updated: 20 Dec 2019 5:45 AM GMT)

டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கியது.

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள்,  எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்கள் வலுத்துள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெறுவதை அடுத்து,  மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசின் உதவியை நாடினார் முதல்வர் கெஜ்ரிவால். 

கர்நாடகாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், கல்லூரி வாயில் முன்பு, மாணவர்கள் தங்களது காலணிகளை கழற்றிவிட்டு கதவை அடைத்தனர்.

நுழைவாயில் கதவுக்கு உள்ளே கல்லூரி மாணவர்களும், நடுவே காலணிகளும், அதன் பின்புறம் போலீசாரும் இருந்தனர். மாணவர்கள் நடத்திய இந்த நூதன போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. செல்போன், இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

அசாமில் முடக்கப்பட்ட செல்போன், இணையசேவைகள் மீண்டும் சீரானது.

டெல்லியில் குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில், இன்று  இரண்டு பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்று மதியம் ஜமா மஸ்ஜித் முதல் ஜந்தர் மந்தர் வரை, மற்றொன்று, மாலையில் இந்தியா கேட் வரை.

இந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் மெட்ரோ ரெயில்  நிலையங்களை மூடுவதற்கான முந்தைய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. டெல்லி மெட்ரோ ரெயில்  கார்ப்பரேஷன் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி செங்கோட்டை, மண்டி மாளிகை மற்றும் ஜந்தர் மந்தர் ஆகிய இடங்களில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர்.

Next Story