போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர்


போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களை சந்திக்க சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 24 Dec 2019 8:29 AM GMT (Updated: 24 Dec 2019 8:09 PM GMT)

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களை சந்திக்க மீரட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர்.

மீரட்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையால், 15-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மீரட்டில் மட்டும் 5 பேர் பலியானார்கள்.

அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று விமானம் மூலம் உத்தரபிரதேசத்துக்கு சென்றனர். பிறகு காரில் மீரட்டுக்கு புறப்பட்டனர்.

மீரட் நகரின் நுழைவாயிலில் பர்தார்பூர் போலீஸ் நிலையம் அருகே அவர்களது வாகன அணிவகுப்பை போலீசார் தடுத்து நிறுத்தினர். மீரட்டுக்குள் நுழைய அனுமதி இல்லை, திரும்பிச் செல்லுங்கள் என்று அவர்கள் கூறியதாக டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தங்கள் இருவர் உள்பட 3 பேருக்கு மட்டும் அனுமதி தருமாறு ராகுல் காந்தியும், பிரியங்காவும் கேட்டுக்கொண்டனர். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர்.

பின்னர், ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு அனுமதி மறுப்பதற்கான உத்தரவை காட்டுங்கள் என்று கேட்டோம். ஆனால் போலீசார் காட்டவில்லை. திரும்பிச் செல்லுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர்“ என்றார்.

பின்னர், ராகுல் காந்தியும், பிரியங்காவும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர். இருப்பினும், அவர்கள் இன்று (புதன்கிழமை) மீண்டும் மீரட்டுக்கு வர முயற்சி செய்வார்கள் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இம்ரான் மசூத், பங்கஜ் மாலிக் ஆகியோர் பலியானோரின் குடும்பங்களை சந்தித்தனர்.

ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மீரட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பற்றியும், பதற்றம் நிலவுவது பற்றியும் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. அமைதியான முறையில் செல்வதாக இருந்தால், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினோம்.

சட்டம்-ஒழுங்குக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண் டும் என்றும் தெரிவித்தோம். அதையடுத்து, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அவர்களாகவே திரும்பிச் சென்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ராகுல், பிரியங்கா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று உத்தரபிரதேச அரசுக்கு காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அமரீந்தர் சிங் (பஞ்சாப்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்) ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story