அரசியலில் இருந்து தூர விலகி இருப்போம் - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி


அரசியலில் இருந்து தூர விலகி இருப்போம் - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2020 11:15 PM GMT (Updated: 1 Jan 2020 7:32 PM GMT)

அரசின் உத்தரவுகளை பின்பற்றுவோம். ஆனால், அரசியலில் இருந்து தூர விலகி இருப்போம் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

புதுடெல்லி, 

ராணுவ தளபதியாக இருந்த பிபின் ராவத், நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார். அவர் நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அந்த பொறுப்பை நேற்று அவர் ஏற்றுக் கொண்டார். 65 வயதுவரை, அதாவது 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியை வகிப்பார்.

அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து பிபின் ராவத் தெரிவித்த கருத்து அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கு பிபின் ராவத் கூறியதாவது:-

நாங்கள் அரசியலில் இருந்து தூர விலகி இருப்போம். அதிகாரத்தில் உள்ள அரசின் உத்தரவுகளை பின்பற்றுவோம்.

முப்படை தலைமை தளபதி என்ற முறையில், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று படைகளையும் ஒருங்கிணைப்பதில்தான் எனது கவனம் இருக்கும். அவற்றின் திறனை மேம்படுத்துவேன். மூன்று படைகளும் ஒரே குழுவாக செயல்படும்.

அந்த படைகள் எனது கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், முடிவுகளை குழு மனப்பான்மையுடன் எடுப்போம். எந்த படையையும் எனது உத்தரவுப்படி செயல்படுத்த முயற்சிக்க மாட்டேன். அனைத்தும் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும். மூன்று படைகளுக்கும் நான் நடுநிலையாக இருப்பேன். இதை 3 ஆண்டுகள் பதவியாக மத்திய அரசு அளித்துள்ளது. எனவே, 3 ஆண்டுகளுக்குள் எனது பணிகளை முடிக்க பாடுபடுவேன். அது சாத்தியமானதுதான். 3 படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவேன்.

காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ஊடுருவல்காரர்களுடன் நடந்த சண்டையில், 2 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்று கேட்டால், திட்டங்களை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. இதுபற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

இதற்கிடையே, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் பிபின் ராவத் சந்தித்தார். அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story