சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்


சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 10 Jan 2020 7:25 AM GMT (Updated: 10 Jan 2020 7:25 AM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

ஐதராபாத்,

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி,  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, 2012 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்தது. 16  மாதங்களுக்கு பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். முதல்வருக்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், ஜெகனின் கோரிக்கையை ஏற்க மறுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். ஆதலால், ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி இவ்வழக்கில் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டது.  இதன்படி, ஐதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஆஜர் ஆனார். 

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெகன்மோகன் ரெட்டி வருகையால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டிருந்தது.

Next Story