தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு? - கர்நாடகத்தில் 2 பயங்கரவாதிகள் கைது


தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு? - கர்நாடகத்தில் 2 பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2020 10:15 PM GMT (Updated: 12 Jan 2020 9:50 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேருக்கும் தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக மாநில அரசுக்கு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்து பிரமுகர் கொலை வழக்கில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சையது அலி, நவாஸ், அப்துல் சமீன் மற்றும் கடலூரை சேர்ந்த காஜா முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 3 பேரும் பெங்களூருவை சேர்ந்த சிலருடன் இணைந்து பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்கள், தமிழகத்தில் தாக்குதல் நடத்த பெங்களூருவில் தனி அமைப்பு தொடங்கியது தெரியவந்தது.

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி வில்சனை, 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது, கேரளாவில் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியான மெகபூப் பாஷா என்பவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பதுங்கி இருப்பதும், அவருக்கு மதராசா பள்ளியில் மதகுருவாக உள்ள சதாகத் உல்லாகான் அடைக்கலம் கொடுத்து வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழக போலீசார், பெங்களூருவில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று மதியம் சதாகத் உல்லாகான் (வயது 35), மெகபூப் பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் பெங்களூருவுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கைதான 2 பேரும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகத்தில் இந்து அமைப்பு பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story