தேசிய செய்திகள்

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது + "||" + 2 terrorists arrested for shooting sub-inspector In Kaliyakaval

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடமாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றபோது கர்நாடகாவில் சிக்கினர்.
மங்களூரு,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி ஒன்று உள்ளது.

இந்த சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) என்பவர் பணியில் இருந்தார்.


சோதனை சாவடிக்கு வந்த 2 வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டரை தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டும் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

உயிருக்கு போராடிய சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை, போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக போலீசாரை மட்டுமின்றி அண்டை மாநில போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் பற்றி களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்றது கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 25) என்பதும், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக காஜாமொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமீம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து புதிய இயக்கத்தை தொடங்கி தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் காஜாமொய்தீன், சையது அலி நவாஸ் உள்பட 3 பேரை கடந்த 8-ந் தேதி டெல்லியில் போலீசார் கைது செய்தனர். இந்த கைதுக்கு பழிக்குப்பழியாக களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல் சமீமும், அவரது கூட்டாளியான தவுபிக்கும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

இதைதொடர்ந்து கொலையாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர். மேலும் இவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் நபர்களுக்கு ரூ.7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். அதோடு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சன்மானம் குறித்த அறிவிப்பை தமிழக போலீசார் வெளியிட்டனர்.

கேரளா, கர்நாடகத்தில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்ற இஜாஸ் பாஷாவை கர்நாடக மாநில போலீசார் குண்டலுபேட்டையில் கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சதக்கத்துல்லாகான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் மெகபூப் பாஷா, கார் டிரைவர் என்பதும், இவர் தான் பயங்கரவாதிகள் 2 பேருக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.

அத்துடன் குண்டலுபேட்டையில் கைதானவர்கள், அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் திட்டம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் அப்துல் சமீமும், தவுபிக்கும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வழியாக வடமாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் உடுப்பி போலீசாரை உஷார்படுத்தினர்.

உடுப்பி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்தில் வைத்து அப்துல் சமீம், தவுபிக்கை தமிழக-கேரளா போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களை உடுப்பியில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களை விசாரணைக்கு பிறகு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தமிழகம் அழைத்து செல்ல உள்ளனர்.