நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் -அரவிந்த் கெஜ்ரிவால்


நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் -அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:43 AM GMT (Updated: 17 Jan 2020 10:43 AM GMT)

நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில்  குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7–ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தூக்கில் போடுவதற்கு முன்பு 4 பேர் எடையையும் கருத்தில் கொண்டு அதே எடை கொண்ட பொருளை தூக்கில் தொங்கவிட்டு பரிசோதிப்பது வழக்கம். அந்த பணிகள் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தூக்கில் போடுவதற்கான வசதி 3-ம் எண் சிறை கூடத்தில் மட்டுமே உள்ளது. தற்போது 4 கைதிகளும் 2-ம் எண் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று மாலை தூக்கு போடும் வசதி கொண்ட 3-ம் எண் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு ஆம்-ஆத்மி அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி அரசின் கீழ் இருந்த அனைத்து வேலைகளும் சில மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பான எந்தவேலையையும் நாங்கள் ஒருபோதும் தாமதப்படுத்தவில்லை. டெல்லி அரசுக்கு இதில் எந்த பங்கும் இல்லை. நிர்பயா குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே  எங்கள் விருப்பம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story