இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 5:06 AM GMT (Updated: 23 Jan 2020 5:06 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. 

சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான்  நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள உவான் நகருக்கு செல்லவும், நகரில் இருந்து மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ​ பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தததாக 2,197 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான ஹாங்காங்கிலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பன்றிக் காய்ச்சல், எபோலா பாதிப்பு ஏற்பட்டபோது அறிவிக்கப்பட்டதைப் போன்று மருத்துவ அவசர நிலையை அறிவிப்பது பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

சீனாவில் இருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே கடும் பரிசோதனைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உட்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களுக்கு விமானம் மூலம் வருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க விமான நிலைய சுகாதார நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு குறித்து தாங்களே முன்வந்து தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 43 விமானங்களில் வந்த 9,156 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்தை தொடர்ந்து மேலும் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அனைத்து நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

Next Story