ஏர் இந்தியா 100% பங்குகள் விற்பனை தேசவிரோதம், நீதிமன்றம் செல்வேன் -சுப்பிரமணிய சுவாமி மிரட்டல்


ஏர் இந்தியா 100% பங்குகள் விற்பனை தேசவிரோதம், நீதிமன்றம் செல்வேன் -சுப்பிரமணிய சுவாமி மிரட்டல்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:41 AM GMT (Updated: 27 Jan 2020 10:41 AM GMT)

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என சுப்பிரமணிய சுவாமி கூறி உள்ளார்.

புதுடெல்லி

கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு  25 ஆயிரத்து 509 கோடி ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை ஏர் இந்தியா இழப்புடன் இயங்கி வருகிறது. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து நிதிஉதவி அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து  ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க  டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

அதே சமயம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால்,  சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது விற்பனை அறிவிப்பும் பலனளிக்கவில்லை என்றால், அதை நிரந்தரமாக இழுத்து மூட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:

மத்திய அரசிடம் போதுமான பணம் கையிருப்பில் இல்லை. அதனால்தான் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. 

இதனால்தான் வேறுவழியே இல்லாமல் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை விற்பனை செய்கிற வழியை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது என கூறினார்.

பா.ஜ.க. எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்ரமணிய சுவாமியும் மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார். சுப்பிரமணிய சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஏர் இந்தியாவில் முதலீடுகளை திரும்பப் பெறும் திட்டம் இன்று மீண்டும் துவங்கி உள்ளது. இந்த முடிவு தேச விரோதமானது. அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன். நமது குடும்பச் சொத்தை நாம் விற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.



Next Story