குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி-வெளிநடப்பு


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி-வெளிநடப்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 11:15 PM GMT (Updated: 3 Feb 2020 9:45 PM GMT)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன..

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவை தொடங்கியவுடன், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

சிலர் பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். ‘சிஏஏ கூடாது’, ‘ஜனநாயகத்தை காப்போம்’, ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ என்று கோஷமிட்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது, டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை கேட்கவில்லை. அமளிக்கிடையே கேள்வி நேரம் நடந்து முடிந்தது.

அதன்பின்னர், பூஜ்ய நேரத்தில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. விவாதத்தில், மேற்கு டெல்லி பா.ஜனதா எம்.பி. பர்வேஷ் சாகிப்சிங்கை பேச சபாநாயகர் அழைத்தபோது, அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். டெல்லி சட்டசபை தேர்தலில் சர்ச்சைக்குரிய பேச்சுக்காக அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்.

இருப்பினும், வெளியில் பேசியதை இங்கு பிரச்சினை ஆக்காதீர்கள் என்று சபாநாயகர் வலியுறுத்தினார். அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க., புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உறுப்பினர்கள், அசாதுதின் ஒவைசி எம்.பி. ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

சற்று நேரம் கழித்து அவர்கள் உள்ளே வந்தனர். அப்போது, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் இரக்கமின்றி சுடப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார். தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபையை பிற்பகல் 1.30 மணி வரை ஓம் பிர்லா தள்ளிவைத்தார்.

மாநிலங்களவை நேற்று காலை கூடியவுடன், மறைந்த ஓமன் சுல்தான், ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பலியானோர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கேள்வி நேரத்தை தொடங்கியபோது, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு குடியுரிமை சட்டம் பற்றி 267-வது பிரிவின்கீழ் விவாதம் நடத்தக்கோரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், அதை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். ஜனாதிபதி உரை மீது அதுபற்றி விவாதிக்கலாம் என்று அவர் கூறினார்.

அதை ஏற்க மறுத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபையை பகல் 12 மணி வரை வெங்கையா நாயுடு தள்ளிவைத்தார். பின்னர், சபை கூடியபோது, உடனடி விவாதம் நடத்தக்கோரி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதை நிராகரித்த சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபையை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைத்தார்.

2 மணிக்கு சபை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், 3 மணி வரை சபை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.


Next Story