ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது டெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை


ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது டெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2020 12:00 AM GMT (Updated: 8 Feb 2020 10:05 PM GMT)

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நேற்று தேர்தல் அமைதி யாக நடந்தது. 61.46 சதவீத வாக்குகள் பதிவாயின. 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், அந்த கட்சியிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க பாரதீய ஜனதா கட்சியும் பலத்த போட்டியில் இறங்கின. இவ்விரு கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்தது.

ஆம் ஆத்மி நிறுவனர் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த தேர்தலில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் (புதுடெல்லி), பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா (ரோகிணி), காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி (காந்திநகர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள். மொத்தம் 672 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், இந்த தேர்தலில் நிர்ணயிக்கப்படுகிறது.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136. இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 2,688 இடங்களில் 13 ஆயிரத்து 571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏறத்தாழ 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மிக மிக மந்தமாகவே தொடங்கியது. முதல்-மந்திரி கெஜ்ரிவால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா என தலைவர்கள் பலரும் வாக்காளர்கள் பெருந்திரளாக வந்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஆனாலும் கடும் குளிர் காரணமாக (வெப்ப நிலை 44.60 டிகிரி பாரன்ஹீட்தான்) காலையில் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அலை, அலையாக வரவில்லை. முதல் ஒரு மணி நேரத்தில் 3.66 சதவீத வாக்குகளே பதிவாகின.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மனைவி சவீதாவுடன் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தனர்.

டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், மனைவி மாலாவுடன் கிரேட்டர் கைலாஷ் வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.

முதல்-மந்திரி கெஜ்ரிவால், மனைவி சுனிதா, புதிய வாக்காளரான மகன் புல்கிட் ஆகியோருடன் வந்து சிவில் லைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராஜ்புரா போக்குவரத்து ஆணைய வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “நாங்கள் செய்த பணிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்காவுடன் நிர்மாண் பவன் வாக்குச்சாவடியிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவுரங்கசீப் லேன் என்.பி.சீனியர் செகண்டரி பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரிகள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் பிரகாஷ் கரத் ஆகியோரும் வாக்களித்தனர்.

பிரபல நடிகை டாப்சி, மும்பையில் இருந்து டெல்லி வந்து வாக்குப்பதிவு செய்தார்.

சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆல்கா லம்பா, வாக்களிக்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர் ஒருவரை அடிக்க கையை ஓங்கியதாக சர்ச்சை எழுந்தது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்தது.

காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு மதியத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கியது. வாக்காளர்கள் அணி, அணியாக வந்து வரிசையில் காத்து நின்று வாக்களிக்க தொடங்கினர்.

18 வயது நிறைவுசெய்து முதல்முறையாக வாக்குரிமை பெற்றுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் மகன் ரைஹான் வதேரா உள்ளிட்ட இளையதலைமுறை வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தபோது 61.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த பிறகு பாரதீய ஜனதா கட்சி சந்தித்த முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை மறுதினம் (11-ந்தேதி) எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும், பிந்தைய கருத்துக்கணிப்புகளும் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story