டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்
x
தினத்தந்தி 12 Feb 2020 12:15 AM GMT (Updated: 11 Feb 2020 11:45 PM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

ஓட்டு எண்ணிக்கை

இந்த தேர்தலில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 3 பெரிய கட்சிகள் களத்தில் இருந்தபோதிலும் ஆம் ஆத்மிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆம் ஆத்மி அமோக வெற்றி

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தன. அதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமைந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.

இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பா.ஜனதாவுக்கு 8 இடங்கள்

மத்தியில் ஆட்சியில் இருந்த போதிலும் தலைநகரான டெல்லியில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாதது பாரதீய ஜனதாவுக்கு உறுத்தலாகவே இருந்து வந்தது. இதனால் இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்காக கடுமையாக போராடியது. என்றாலும் பலன் இல்லை. அந்த கட்சிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் இந்த தடவையும் அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துதான் கிடைத்தது.

1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை ஆட்சி நடத்திய காங்கிரசுக்கு, இந்த தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் வெற்றி

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் சுனில் குமார் யாதவை விட 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.

பிரதாப் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்-மந்திரியும், கல்வி மந்திரியுமான மணிஷ் சிசோடியா, தொடக்கத்தில் பின்தங்கி இருந்த போதிலும், இறுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் ரவீந்தர் சிங் நேகியை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட மந்திரிகளும் வெற்றி பெற்றனர்.

ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனாதுல்லா கான் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டெல்லியில் உள்ள 12 தனித்தொகுதிகளையும் (எஸ்.சி. தொகுதிகள்) ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது.

தொண்டர்கள் கொண்டாட்டம்

ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக அமைந்து இருந்ததால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். டெல்லி தீனதயாள் உபத்யாய மார்க் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். கட்சி அலுவலகம் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, கெஜ்ரிவாலின் கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது.

முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கிய சமயத்தில் சஞ்சய் சிங், கோபால் ராய் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோருடன் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

கட்சி அலுவலகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், ஆடிப்பாடியும் ஆம் ஆத்மியின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதால், பட்டாசு வெடிக்காமல் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய அரசியல்

கட்சி அலுவலகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசுகையில், ஆம் ஆத்மி பெற்ற வெற்றி ஒட்டு மொத்த தேசத்துக்கும், டெல்லி மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், டெல்லி மக்கள் தன்னை தங்கள் பிள்ளையாக கருதுவதாகவும் கூறினார்.

அனுமார் தங்களை ஆசீர்வதித்து இருப்பதாகவும், டெல்லி மக்கள் உருவாக்கி இருக்கும் வளர்ச்சிக்கான இந்த புதிய அரசியல் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்றும், டெல்லி மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற இறைவன் தங்களுக்கு கூடுதல் பலத்தை தரவேண்டும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

பின்னர் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மற்றும் தனது குடும்பத்தினருடன் கன்னாட் பிளேசில் உள்ள அனுமார் கோவிலுக்கு சென்று கெஜ்ரிவால் சாமி கும்பிட்டார்.

மீண்டும் முதல்-மந்திரி

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சி டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. கெஜ்ரிவால் 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

2013-ம் ஆண்டில், முதன் முதலாக தேர்தல் களத்தில் குதித்த ஆம் ஆத்மி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். ஆனால் அப்போது அவர் 49 நாட்களே முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அதன் பிறகு 2015-ம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் இரண்டாவது முறையாக முதல்-மந்திரி ஆனார். இப்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிப்பது கவுரவ பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், இரு பெரும் தேசிய கட்சிகளையும் வீழ்த்தி கெஜ்ரிவால் அங்கு மீண்டும் அரியணை ஏறுகிறார்.

‘டெபாசிட்’ இழந்தனர்

2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 54.34 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது 32.7 சதவீத வாக்குகளை பெற்ற பாரதீய ஜனதாவுக்கு வெறும் 3 இடங்களே கிடைத்தன.

இந்த முறை பாரதீய ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்து இருக்கின்றன. அதாவது ஆம் ஆத்மியிடம் இருந்து 5 தொகுதிகளை பறித்து இருக்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 பேர் தங்கள் ‘டெபாசிட்’டை இழந்தனர்.

போராட்டங்கள்

தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது.

ஆம் ஆத்மி கட்சியினர் தங்கள் அரசின் சாதனைகள், கல்வி, சுகாதாரம், டெல்லியில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களுடைய பிரசாரம் மக்களை கவர்ந்து இருப்பதையே தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Next Story