நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தேதி கேட்டு திகார் சிறை நிர்வாகம் மனு டெல்லி கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு


நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தேதி கேட்டு திகார் சிறை நிர்வாகம் மனு டெல்லி கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 10:22 PM GMT)

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட தேதி கேட்டு திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இதனை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள சட்டரீதியான தடைகளை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி சிறைத்துறையும் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மத்திய அரசும், சிறைத்துறையும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எஸ்.ஏ.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, ‘மத்திய அரசும், திகார் சிறை நிர்வாகமும் விசாரணை கோர்ட்டில் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை (மரண வாரண்டு) பெற்றுக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது.

தூக்கிலிட தேதி கேட்டு மனு

இதனையடுத்து திகார் சிறை நிர்வாகம் சார்பில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட தேதி கேட்டு (மரண வாரண்டு) புதிய மனு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வக்கீல் விலகல்

விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தாவின் வக்கீல் ஏ.பி.குப்தா இந்த வழக்கில் இருந்து விலகுவதால் நோட்டீசை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் தங்கள் தரப்பில் புதிய வக்கீல் யாரையும் நியமிக்கவில்லை என்று குற்றவாளி பவன்குமார் குப்தாவின் தந்தை தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதி, ‘இலவச சட்ட மையத்தில் பதிவு செய்துள்ள வக்கீல்களில் ஒருவரை குற்றவாளி பவன்குமார் குப்தாவுக்காக நியமிக் கலாம்’ என்று கூறினார். நிர்பயா பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் சீமா குஷ்வாஹா, குற்றவாளிகள் 7 நாட்களுக்குள் உரிய சட்ட உரிமையை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர்களை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

குற்றவாளிகளின் வக்கீல் மற்றும் பவன்குமார் குப்தாவின் தந்தை வழக்கை மேலும் காலதாமதம் செய்ய சதி செய்வதாக குற்றம் சாட்டினார். சட்டப்படி பவன்குமார் குப்தாவுக்கு இலவச சட்ட ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மற்றொரு வக்கீல் விருந்தா குரோவர் வாதாடினார். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது, எனவே அதுவரை தூக்கிலிடும் தேதியை அறிவிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இலவச சட்ட ஆலோசனைக்கு ஏற்பாடு செய்தாலும் குற்றவாளிகளை தூக் கிலிடும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலவச சட்ட மையம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேந்தர் ராணா தன்னுடைய உத்தரவில், ‘தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி யாராக இருந்தாலும் அவருடைய கடைசி மூச்சு இருக்கும் வரை இலவச சட்ட ஆலோசனைக்கு உரியவர் ஆகிறார். குற்றவாளி தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்காமல் முடிவு எடுப்பது தவறான உதாரணமாகிவிடும்.

இலவச சட்ட மையத்தை சேர்ந்த வக்கீல்களின் பட்டியலை குற்றவாளி பவன்குமார் குப்தாவின் தந்தை மற்றும் சிறை சூப்பிரண்டுக்கு வழங்க வேண்டும். அந்த பட்டியலில் இருந்து பவன்குமார் குப்தா தனக்கு வேண்டிய வக்கீலை தேர்ந்தெடுத்துக்கொள்ள தேவையான நேரம் வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணை நாளை (இன்று) ஒத்திவைக்கப்படுகிறது’ என்று கூறினார். இதனையடுத்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story