நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை; நீதிபதிக்கு திடீர் மயக்கம் - உத்தரவு ஒத்திவைப்பு


நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை; நீதிபதிக்கு திடீர் மயக்கம் - உத்தரவு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 11:28 AM GMT (Updated: 14 Feb 2020 11:28 AM GMT)

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர் களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது.

இந்தநிலையில்  குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீர்ப்பை நீதிபதி பானுமதி உத்தரவு பிறப்பிக்க தயாராகி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்த  பாதுகாப்பு அதிகாரிகள் நீதிபதி பானுமதிக்கு முதலுதவி அளித்துள்ளனர். 

பின்னர், அவரது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

Next Story